
Fowzuna izzadheen ( B.Sc. Psychology , Psy. Counselor , Motivational Trainer , NLP & Emotional Intelligence Trainer )
அவன் என்னிடம் தன் காதலை சொன்ன போது என் சாதாரண தர பரீட்சைக்கு ஒரு சில மாதங்களே இருந்தன.பரீட்சை பற்றிய பயங்கள் என்னை அவனை நோக்கி ஈர்த்தது.அவனிடம் நான் என்னை தேடத் தொடங்கினேன்.
அவனுடன் இருந்த கணங்களில் என் கவலைகள் எல்லாம் எங்கோ மறைந்து போனது.உலகம் புதிதாக இருந்தது. சிறுவயதில் என் தந்தையிடம் கிடைத்த அரவணைப்பை மீள அனுபவிப்பது போலிருந்தது.
வகுப்புகளுக்கு செல்லாமல் அவனை சந்திக்க செல்வது அதிகரித்தது.வீட்டில் படிக்கும் நேரங்களில் அவனுடன் கனவுலகில் சஞ்சரிப்பது வழமையாகியிருந்தது.
திருமணம் குறித்து அவன் கேட்ட போதெல்லாம் வயதை காரணம் காட்டி தவிர்த்துக் கொண்டேயிருந்தேன்.திருமணம் பற்றிய குழப்பங்கள் என்னுள் பிரளயங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. திருமண வாழ்வு எப்படியிருக்கும் என்ற கற்பனைகள் கூட எனக்கு வலித்தது. எனது பெற்றோருடைய திருமண வாழ்வு எனது திருமணம் பற்றி பயத்தை ஏற்படுத்தியது.
எனது அம்மா மருத்துவ பீடத்தில் இருந்த போது அதே பேராதெனிய பல்கலைக்கழகத்தில் அப்பா பொறியியல் பீடத்தில் இருந்திருக்கிறார்.அந்த காதலின் அழகு ஏனோ போட்டோ அல்பங்களினுள் மட்டுமே இருந்தது.அந்த காட்சிகளில் இன்பம் படர்ந்திருந்தது.அந்த காதலும் அந்த உணர்வுகளும் எமது வீட்டில் இருந்ததே இல்லை.
எல்லா வசதிகளும் இருந்தும் எமது வீடு பொலிவிழந்து இருந்தது. அமைதி படர்ந்திருந்தது. அம்மாவும் அப்பாவும் சிரித்து பேசிய ஞாபகங்கள் இல்லையென்றே சொல்லலாம்.
பத்து வயதிற்கு முன் அப்பாவின் உலகம் என்னை சூழ்ந்திருந்தது. நான் வயதிற்கு வந்த பின் நானாக சிறிது சிறிதாக விலகத் தொடங்கிய பொழுது அம்மா மேல் மாடியிலிருந்து அறைக்கு மாறினார்.அப்பா அவருடைய லெப்டொப்புடன் அவரது அறையுள் தொலைந்து போயிருந்தார்.
அவருடைய ஆன்லைன் வாழ்க்கை குறித்து அடிக்கடி நடக்கும் சண்டைகள் மட்டுமே எமது வீட்டில் கேட்கும் பேச்சு சத்தங்களாக இருந்தன.
அம்மா மீதான சந்தேகங்கள் சண்டைகளை இன்னும் வலுப்படுத்த வீடு போர்க்களமானது. அவர் வேலை செய்த மருத்துவமனைக்கு புதிதாக மாற்றலாகி வந்த அம்மாவின் பல்கலைக்கழக தோழர் அடிக்கடி எம் வீட்டிற்கு வந்த போது அந்த சந்தேகங்கள் உண்மையாக இருக்குமோ என்று என்னுள் கேள்விகள் உருவானது. திருமண வாழ்வு பற்றிய எனது வரைவிலக்கணங்கள் இன்னுமின்னும் சிதறத் தொடங்கியது.
என்னை சூழ நெருப்பு பற்றிக் கொண்டிருக்க நானோ அவனுடைய கதகதப்பை இன்னுமின்னும் நாடத் தொடங்கினேன். அதுவே எனக்கான ஆறுதலாகவும் இருந்தது. வெளியிடங்களில் நிகழ்ந்த சந்திப்புகள் வெகு விரைவிலேயே வீட்டில் நிகழத் தொடங்கியது. அவன் அணைப்பில் என் உலகம் சுருக்கிப் போனது.
அப்படியாக அவன் வந்த ஒரு நாளில் ஜன்னலை திறக்கும் போது அருகிலிருந்த க்ளாஸ் விழுந்து சிதறிய சத்தம் கேட்டு அம்மா வந்தார்.
அதன் பின் வந்த நாட்கள் மிக அமைதியாக கழிந்தது. யாரும் எதுவும் சொல்லவில்லை.ஆனால் அன்றிலிருந்து அம்மா என்னுடைய அறையில் உறங்க தொடங்கினார். எனக்குள் ஒருவித வெறுமை படர மறுபுறம் என்னுடைய பெறுபேறுகள் சரிந்து கொண்டிருந்தது.
வெளியில் செல்லவும் அனுமதி மறுக்கப்பட அவனை சந்திக்க முடியாமல் தடுமாறினேன்.ஏனென்றும் புரியாமல் என்னை விட்டே நான் தூரமாகிட நாள் முழுதும் தூங்குவதை விட வேறு வழிகள் இருக்கவில்லை.
இவ்வாறு நாட்கள் மாதங்களாக மாற ஒரு நாள் அம்மா அவரது மருத்துவமனைக்கு என்னை அழைத்துப் போனார்.அங்கிருந்த ஒரு ஆன்ட்டியை அறிமுகம் செய்து வைத்தார்.ஆரம்பத்தில் பேசுவது கஷ்டமாக இருந்தாலும் போகப் போக மனம் திறந்து பேசலானேன்.
சில தினங்களில் சைக்கியாட்ரிக் வார்டில் ஒரு வைத்தியரிடம் போய் கொஞ்சம் பேசிவிட்டு வெளியில் காத்திருந்த போது “டாக்டர் மதி உங்க மகளுக்கு “ஸ்கிட்சோர்ப்ரீனியா” என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறேன். தான் தேடிய தந்தையின் அன்பை கற்பனையாக உருவாக்கிக் கொண்ட ஒருவர் மூலமாக அவளாக அனுபவிக்கிறாள். உங்களதும் கணவரினதும் உறவு முறை சிக்கல்கள் அவளை மேலும் சிதைத்திருக்கிறது. எதுக்கும் கன்சல்டன்ட் சார் வந்த பின் கன்போர்ம் பண்ணிட்டு மருந்து கொடுக்கத் தொடங்குவோம்.”என்ற வார்த்தைகள் என் காதுகளில் விழுந்தாலும் அதை புரியும் நிலையில் நான் இருக்கவில்லை.
Fowzuna izzadheen
1 Comment
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.