
அன்பாளும் உலகு…
வட்ஸப்பில் அதனைப் பார்த்ததிலிருந்து அவளது எண்ணம் அதையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. இதனை எப்படி அவரிடம் சொல்வது? சொன்னால் எப்படியான ரியாக்ஷன் வரும்? மாமியார் வீட்டிலிருந்து என்னென்ன சொல்வார்களோ? உம்மா வீட்டினரும் உடன் பிறப்புகளும் என்னென்ன சொல்வார்கள்? என்றெல்லாம் அடிக்கடி கேள்விக்கணக்குகள் மனதிற்குள் எழுந்து கொண்டேயிருந்தன. எதற்கும் அவசரப்படக் கூடாது. காலமும் நேரமும் கூடி வரும் வரை காத்திருந்தாள் ரஹீமா.
‘ரஹீமா’ பேரில் உள்ளது போல மிகுந்த நேச குணம் கொண்டவள்,வாசிப்பில் ஆர்வமுள்ளவள், குடும்ப மற்றும் சமூக விடயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவள், ஏழ்மையானதொரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இன்று நல்லதொரு குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். வீட்டிலிருந்து தனது இரு பிள்ளைகளைப் பராமரிப்பது முதல் கணவன் ஸாஜிதின் வியாபார விடயங்களில் பங்கெடுப்பது வரை அவளது நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அத்தோடு அவள் நிறைமாதக் கர்ப்பிணித் தாயும் கூட.
அன்று ஞாயிற்றுக் கிழமை. அனைவருக்கும் விடுமுறை நாள். பக்கத்திலிருந்த கடற்கரைக்குச் சென்று விளையாட வேண்டுமென்ற பிள்ளைகளின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு நால்வரும் நடக்கத் தொடங்கினர். பிள்ளைகளிருவரும் குதூகளித்து விளையாடத் தொடங்கினர். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல ஸாஜிதிடம் விடயத்தைச் சொல்ல நல்லதொரு சந்தர்ப்பம் ரஹீமாவிற்குக் கிடைத்தது.
எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் முதலில் கொண்டு போன இஞ்சிப்ளேன்டியை ஊற்றி ஸாஜிதின் கைகளில் கொடுத்தாள். ‘ஏங்க! ஏற்கனவே ரெண்டு பேரும் சீஸர் பண்ணிதால இந்த முறையும் சீஸர் தான் பண்ணுவாங்க. அதோட மத்த ஒபரேஷனயும் பண்ணனும்னு டொக்டர் நேத்து சொல்லிட்டார்.’ என்று பெருமூச்சுடன் கூறி நிறுத்தினாள்.’எல்லாம் அல்லாஹ்ட நாட்டம் தானே. மூன்று பேரை அல்லாஹ் தந்திருக்கிறான். பொம்புளப் புள்ள ஒன்ட மட்டும் தான் நமக்கு நாடல்ல!’ எனக்கூறி பெருமூச்சு விட்டாள் ரஹீமா. ‘சரி இதில யோசிக்க ஒன்னுமில்ல. அல்லாஹ்ட கத்ர நாங்க ஏத்துக் கொள்ளத்தான் வேணும். இப்ப அதெல்லாம் யோசிக்க வேணாம்!’ என ஸாஜித் ஆறுதல் கூறினார். இது தான் சந்தர்ப்பம் என்று தனது அவாவைக் கூறத் தொடங்கினாள்.
‘ஏங்க ஒவ்வொரு முறையும் டிலிவரிக்கு மொத எனக்கு விருப்பமான எதையாவது செய்து தார தானே நீங்க. இந்த தடவ என்ன வேணும்னு கேட்டீங்களே. நான் என்ட ஆசய சொல்றேன். செய்வீங்களா?’ என கண்களில் எதிர்ப்பார்புகள் ததும்ப வினவினாள். உடனே அவளது கைகளைப் பற்றி ‘சொல்லுங்கவா. நீங்க கேட்டா நான் செய்யாம இருப்பேனா? என்ன வேணும்?’ என்று அன்பு வழிய கேட்டான் ஸாஜித்
‘நாங்க ஒரு பொம்புளப் புள்ளய தத்தெடுப்போமா?’ என ஒரே மூச்சில் கேட்டு முடித்து கணவனின் ரியாக்ஷனுக்காய் காத்திருந்தாள். அவருக்கோ வினோதமாக இருந்தது.’என்ன சொல்றீங்க. நமக்குத்தான் இன்னம் ரெண்டு நாள்ல இன்ஷா அல்லாஹ் ஒரு புள்ள பொறக்க போவுதே! பிறகென்ன சொல்லறீங்க?’எனக்கேட்டார் ஆச்சரியத்துடன்.
‘ஓம்ங்க! ஏன்ட ப்ரென்ட் நஸ்ரின் ஹொஸ்பிடல்ல மிட்வைபா இருக்காளே அவள் நேத்து ஹொஸ்பிடல்ல வெச்சி என்னோட பேசினா. யாரோ பொறந்த புள்ளய ரோட்ல போட்டுட்டு போய் இருக்காங்க. அதுவும் நைட்ல. புள்ள அழுர சத்தம் கேட்டு அதால போன ஆட்டோக்கார ஆளொன்டு புள்ளய பொலிஸ்ல ஒப்படச்சி இருக்கார். புள்ள இப்ப ஹொஸ்பிடல்ல. அல்லாஹ்ட உதவியால புள்ளக்கி ஒன்னும் ஆகல்ல.
அதும் பொம்புளப் புள்ளயாம். எனக்கு அவள் சொன்னதுல இருந்து அத புள்ளய நம்மட புள்ளயோட சேர்த்து வளக்கனும்னு ஆச வந்துட்டு’ என கூறி முடித்தாள்.
அவளது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஸாஜித் ‘ நீங்க யோசிச்சி தான் கதைக்கிறீங்களா? சும்மா ஒளராதீங்கவா. யார்ட புள்ளயோ? எப்பிடி கெடச்ச புள்ளயோ? இதெல்லாம் சாத்தியப்படாது. மொதல்ல குடும்பத்து ஆக்கள் ஏத்துக் கொள்ள மாட்டாங்க. ஊர் என்ன சொல்லும். இதெல்லாம் சரி வராதுவா நீங்க இதெல்லாம் யோசிச்சு தானா கதைக்கிறீங்க’ என மறுத்தான். ‘யாரோ செய்ற பிழைக்கு அந்தப் புள்ளய எப்பிடிங்க காரணமாக்குற? ஆணும் பெண்ணும் இணைஞ்சா புள்ள பொறக்கும்ங்குறது அல்லாஹ்ட கழா. வழிமுறை பிழையா இருக்கலாம். ஆனால் இந்த புள்ள பொறந்தது ‘கழா’ வில. அதுக்காக நாம புள்ளைட மேல பலியப் போட்டு அத அனாதயா உட்றது நியாயமா? வழிமுறை பிழையா இருந்தாலும் எல்லா புள்ளகளும் ‘பத்ரா’ வுல தானே பொறக்குது. பாவம்ங்க எனக்கு அந்த பிஞ்சி முகத்த போட்டோவுல பாத்ததில இருந்து கண்ணுக்குளயே இருக்குங்க. யார்ட புள்ளயா வேணா இருக்கலாம். இப்ப யாருமில்லாம அநாதயாத் தானே இருக்கு. என்ட இந்த ஆசய என்ட வாழ் நாள் ஆசயா ஏத்துக் கொள்ளுங்க ப்லீஸ்!’ அவளது வார்த்தைகளில் உண்மையும் நிதர்சனமும் இருந்தது. ஸாஜிதின் மனது சற்றுக் கசியத் தொடங்கியது. ‘பெரிசா ஒன்னுமில்லங்க 4 நாள் வித்தியாசம் தானே. பேசாம ரெட்ட புள்ளன்டு சொல்லிருவமே! இதால சரி மறுமைல நாம ரெண்டு பேரும் ரஸூலுல்லாஹ்க்கு மிக நெருக்கமா இப்பிடி இருக்கலாம் ‘ என்று தனது விரல்களால் இரண்டைக் காட்டினாள் ஏக்கத்துடன்.
ஸாஜிதின் உள்ளம் தடுமாறியது. தனது மனைவியைப் பார்த்து ‘இதெல்லாம் சாத்தியமாகுமா?’ என்று மிகப் பெரும் கேள்விக்குறியுடன் இறுதியாகக் கேட்டான். ‘அதெல்லாம் சாத்தியமாகும்ங்க. குடும்பத்தப்பத்தி யோசிக்க வேணாம். எல்லாரயும் கன்வைஸ் பண்ணிரலாம். இதுல நீங்க தான் முடிவுல உறுதியா இருக்கனும். மத்தது இந்த விஷயம் வெளில யாருக்கும் பெரிசா தெரியாது. ஹொஸ்பிடல் ரூல்ஸ் படி சீக்ரட்டா வெச்சிருக்காங்க. மத்தது நஸ்ரின் ஸீனியர் என்டதால அவ தான் இத வெளியாக்க வேணாம்னும் சொல்லிருக்கா. லீகல் விஷயங்கள அவள் பாத்துகொள்வாள். நீங்க யோசிக்காதீங்க. நிச்சயமா ஒங்களுக்கு கலங்கம் விளைவிக்கிற எந்தவொன்டையும் நான் செய்ய மாட்டேன். ரெண்டு பேரும் ரெண்டு ரக்ஆத் தொழுதுட்டு அல்லாஹ்கிட்ட துஆ கேப்போம். அல்லாஹ் அவனுக்காக செய்ய நெனக்கிற எல்லாத்தையும் சாத்தியப்படுத்தி வைப்பான் என்ட நம்பிக்க எனக்கிருக்குங்க’. என்று வார்த்தைகளால் நம்பிக்கையூட்டினாள்.
தனது மனைவி தன்னை விட எண்ணங்களால் மிக மிக உயர்நதவள் என்று மனதுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டான் ஸாஜித். தூரத்தில் பொங்கி எழுந்து வந்த அலையொன்றின் ஆர்ப்பரிப்பை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தது விசாலமான கரை.
ஹஸ்ஸானா பர்வீன் (இஸ்லாஹி)
திருகோணமலை