
Zuhdha Hasan(Islahi), Higher National Diploma in English (R) SLIATE, Islamic studies (Islahiyyah Ladies Arabic College), Dewahuwa,Galewela, Matale
நேரம் என்பது மனித வாழ்வின் மிக முக்கியமான வளமாகும். எமது இஸ்லாம் மார்க்கம் நேரத்தை மிகவும் மதிக்கிறது.அது மட்டுமல்லாமல் அதை உண்மையான முறையில் வாழ்க்கையில் நடைமுறை படுத்துவதற்கும் முக்கியத்துவம் வழங்குகின்றது. எமது வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் அல்லாஹ் எமக்களித்த மாபெரும் அருட்கொடையாக இருக்கின்றது எனவே நேரத்தை பேணுவதும் அதனை நன்றாக நிர்வகித்து பயன்படுத்திக் கொள்வதும் மனிதனின் கடமையாகும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் நேரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பல விடயங்கள் காணப்படுகின்றன. குர்ஆனில் அல்லாஹ் நேரத்தின் மீது சத்தியம் செய்து குறிப்பிடுகின்றான்:
“காலத்தைக் கொண்டு சத்தியமாகமனிதன் நிச்சயமாக இழப்பில் உள்ளான்.” (குர்ஆன்இ 103:1-2)
இந்த வசனம் நேரத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் அதை வீணடிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது.
நேரத்தை வலியுறுத்தும் கடமைகள்.
இஸ்லாம் ஒருவரின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் முழுமையான வழிகாட்டியாக இருக்கிறது. அதில் தினசரி கடமைகளில் நேரத்தை பயன்படுத்துவதற்கான சிறந்த முறைகளை அமைத்துள்ளது. உதாரணமாகஇ ஐந்து நேர தொழுகை நேரத்தை ஒழுங்கு செய்ய உதவுகிறது. தொழுகைக்கு நியமிக்கப்பட்டுள்ள நேரங்கள் ஒழுங்கான வாழ்க்கையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதைத் தவிர ரமலான் நோன்பு, ஜகாத் வழங்கும் நேரம்,ஹஜ் செய்யும் காலம் போன்றவை நேரத்தைத் துல்லியமாகப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்கின்றன. இவை நேரத்தை நன்மையான விடயங்களுக்கு பயன்படுத்தும் ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைக்கின்றன.
நேர முகாமைத்துவத்தின் நெறிமுறைகள்.
நேர முகாமைத்துவம் பற்றி இஸ்லாம் சில முக்கியமான நெறிமுறைகளையும் வலியுறுத்துகிறது. முதலில் திட்டமிடல் என்பது அவசியம். ஒரு நாளுக்கான அல்லது மாதத்திற்கான திட்டங்களை உருவாக்கி செயல்பட வேண்டும். இது நேரத்தை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும். இரண்டாவது வேலைகளை தாமதமாக்காமல் தொடக்கத்தில் செய்யும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். நபி (ஸல்) கூறியுள்ளார்கள்:
“இரண்டு அரிய நன்மைகள் உள்ளன; அதைப் பலர் தவறவிடுகிறார்கள்: அவை சுகமான வாழ்க்கையும் காலமும் ஆகும்.”
இது நேரத்தை விரைவாகப் பயன்படுத்தும் பழக்கத்தை வளர்க்கச் செய்கிறது மட்டுமல்லாமல் நேரத்தை பயனுள்ள செயல்களில் செலவிடுவதற்கான ஊக்கத்தையும் அளிக்கிறது. மூன்றாவது நேரத்தை வீணடிப்பதை தவிர்ப்பது முக்கியமானது. குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் நேரத்தை வீணாக்குதல் ஒரு பெரும் இழப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாம் நேரத்தைப் பற்றிய உயர்ந்த இலக்குகளை வலியுறுத்துகிறது. ஒவ்வொரு நேரத்தையும் ஒரு நல்ல முடிவை அடைவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். நேரத்தை தரமான செயல்களில் செலவிடுவது மனநிறைவை ஏற்படுத்தவும்இ குடும்ப உறவுகளை மேம்படுத்தவும் உதவும்.
நேரத்தை சரியாக பயன்படுத்துவதால் அது தொழில்நுட்ப வளர்ச்சிக்கும்அறிவியல் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். மேலும் நேரத்தை நன்றாக நிர்வகித்தால் அது மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும். குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதன் மூலம் உறவுகள் வலுவடையும்.
இறுதியாக இஸ்லாம் கூறும் நேர முகாமைத்துவம் மனித வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஒரு முக்கிய வழிகாட்டியாக அமைகிறது. நேரத்தை மதிக்கவும் அதனை நன்மைக்காகப் பயன்படுத்தவும் கற்றுத்தருகிறது. நேரம் ஒரு தங்கமான சொத்து என்பதை உணர்ந்து அதை வீணடிக்காமல் வாழ்வது இஸ்லாம் வலியுறுத்தும் முக்கியமான விடயங்களில் ஒன்றாகும். இன்றைய உலகில் இந்த விடயங்களை அனைவரும் கருத்திற்கொண்டு செயல்பட்டால்வெற்றியுடன் கூடிய வாழ்வு நிச்சயம்.