
படைப்பினங்கள் இறைவனின் அழகிய குடும்பம்
உறவுகள் இணைந்திடும்
போது குடும்பங்களின்
இலக்கணங்களும்
அர்த்தங்கள் கூறும்…
சமூகப் பிராணியாய்
சித்தரிக்கும் தத்துவஞானிகளுக்கும் உன்னத உறவுகளின் வாழ்க்கை வடிவமே
வழிஅமைத்து இடம்கொடுத்தது..
வல்லவன் எச்சரித்த இரத்த பந்தங்கள் வீதிப்பேச்சுக்களில்
பேசு பொருளாய் விளம்பரம் தருவதே
இன்றைகளின் அவலங்களின் ஆணிவேர்…
நான்கு சுவருக்குள்
சுயநலமாய் சுருங்கிக் கிடக்கும்
உறவுகளின் ஊமைத்தனங்கள்
தனிமையின் தாண்டவங்களை
வீட்டுக்குள் முடக்கி
குறுகிய சிந்தனையை
குற்றமற்ற மனநிலையை
உள்ளங்களோடு பின்னி விட்டிருக்கிறது…
அறிவின் ஆணவம்
ஆழமாய் மனங்களில்
எழுத்தின் கீறல்களில்
மீறாத உறவுகள்
ஆகாயப் பெருவெளியில்
சந்திக்காத கிரகங்களாய்
நகர்ந்திடும் நீண்ட
இடைவெளியில் நீந்திடும் உறவுகளாய்
அவனியில் அற்புதங்கள்…
இரண்டு நிமிடங்கள் உறவாடவும்
புன்னகைக்கவும் வருடங்கள் வரிசையில் நிற்க வேண்டுமோ?
எண்ண அலைகளில் அலைமோதும் ஏக்கங்கள் யாரறிவார்…
தொலைபேசியில் தொலைந்து போகும் காலங்களுக்கு வரமிருந்து நேரம் ஒதுக்கும் உள்ளங்களுக்கு
பாச பந்தங்களின்
உணர்வுகளின் ஓசை மட்டும் மரணித்துப் போனதோ…
வாழ்ந்த நாட்கள்
அதிகம்தான் இனி வாழும் நாட்களாவது வாழ்க்கைக் கலையின்
அழகியல் உணர்வுக்கு
உயிர் கொடுத்து
இளமை உணர்வுகளை உறவுகளுக்குள் புகுத்திட புதுமைகள்
படைப்போம்…
சேஹு முஹம்மது பெனாஸிரா(இஸ்லாஹி,BA,PGDE )