
SAMEERA ABDUL HALEEM ISLAHI
வீடு என்பது கணவன், மனைவி, பெற்றோர் மற்றும் பிள்ளைகளை உள்ளடக்கிய ஒரு சமூகத்தின் தனித்துவமான அங்கமாகும். அந்த வீடு அதில் வாழும் அதன் ஒவ்வொரு அங்கத்தவர்களுக்கும் பௌதீக ரீதியில் பாதுகாப்பையும் உள ரீதியான மன அமைதியையும் வழங்கக்கூடிய இறைவனின் பெரியதொரு அருட்கொடையாகும். இதனையே அல்குர்ஆன் அல்லாஹ் உங்களுடைய வீடுகளை உங்களுக்கு அமைதி தரும் இடமாக ஆக்கியுள்ளான்” என்று அல்குர்ஆனின் 16.80 ஆவது வசனத்திலே குறிப்பிட்டுள்ளான்.
குடும்பத்தில் இறைவனுக்கு கீழ்படிந்து வாழும் இஸ்லாமியச் சூழலை உருவாக்குவதோடு வீட்டங்கத்தவர்களிடையே அன்னியோன்னியமான அன்பின் பிணைப்பை ஏற்படுத்துவதிலும்,ஆரோக்கியமான உடலியல் மற்றும் உளவியல் காரணிகளைப் பேணிக் கொள்வதிலும் ஒரு முஸ்லிம் பெண்ணின் பங்களிப்பு இன்றியமையாதது. வீட்டில் ஒரு பெண் தாயாக, மனைவியாக, மகளாக, சகோதரியாக என்று பல்வேறு விதமான பரிணாமங்களில் தன்னுடைய வகிபாகத்தை வெளிப்படுத்துகிறாள். நபி(ஸல்) அவர்கள் “ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கும்,அவனது குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். அவர்கள் அனைவரைப் பற்றியும் அவள் விசாரிக்கப்படுவாள்” என்று கூறினார்கள்.(புஹாரி) இந்த ஹதீஸின் மூலம் ஒரு முஸ்லிம் பெண் குடும்பப் பொறுப்பைச் சீராக ஏற்று நடத்துவது அவன் நிறைவேற்ற வேண்டிய அமானிதமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்றைய நவீன உலகில் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக குடும்பக் கட்டமைப்பு பல நவீன சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றது. டிஜிட்டல் உலகில் இணையத்தை பயனுள்ள வழியில் பயன்படுத்துவது. சமூக ஊடகங்களை முறையாக கையாளுவது போன்றவற்றை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இதில் பெற்றோர்களும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.குடும்ப உருவாக்கத்தில் ஒரு பிள்ளையின் முழுமையான ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் விருத்தியில் சிறந்த பெற்றோரியக் (parenting )கட்டமைப்புத்திறன் செல்வாக்கு இன்றியமையாததாகும். இக்கட்டமைப்பினுள் பெற்றோர் இருவரினதும் ஒன்றிணைந்த கூட்டுப்பொறுப்பும் இருவருக்குமேயுரிய தனித்துவமான பங்களிப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்தோடு பிள்ளைகளில் ஏற்படுத்தும் செல்வாக்கானது அவர்களது பிள்ளைகளுடனான ஈடுபாட்டின் அளவை வைத்தே தீர்மானிக்கப்படும். பெற்றோர் தமது குழந்தைகளுடன் எவ்வாறு தமது நேரத்தைச் செலவழிக்கிறார்களோ அந்நேரமானது, குழந்தைகளின் கல்வி மற்றும் அறிவாற்றல் விருத்தியில் செல்வாக்குச் செலுத்தி நேர்சீரான விளைவுகளை ஏற்படுத்துவதில் நேரடியாகச் செல்வாக்குச் செலுத்துவதனை ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகிறது.
பிள்ளை வளர்ப்பு என்பதன் பொருள் அடுத்த சந்ததிகளை உருவாக்கும் மகத்தான பணியாகும். முழு சமூகக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையும்,பலமும் அந்த உருவாக்கத்தின் ஆரோக்கியமான தன்மையிலே தங்கியுள்ளது. ஒரு மனிதனின் உள்ளம், உடல், ஆன்மா என்பவற்றினை இஸ்லாமிய வழிகாட்டலின் அடிப்படையில் வளர்த்தெடுப்பதென்பது மிகவும் பாரிய பணியாகும். இவ்வகையில்குடும்பத்தின் இயக்கவியலின் (Dynamic) அச்சாணியாய் பிரதான ஆளுமையாக ஒரு பெண் திகழ்கிறாள்.இந்த வகையில் குழந்தை வளர்ப்புகுடும்ப உருவாக்கம் என்ற பணிகள் திறம்பட விளைதிறனோடும் நிறைவேற்றிட ஒரு பெண்ப்பாதையில் பயணித்திட ப்பணிகளுடன் தொடர்புடைய இஸ்லாமியச் சமூக, உளவியல் எண்ணக்கருக்களின் அறிவை வளர்த்துக் கொள்வதுடன் ஆளுமைப் பண்புகளை உருவாக்கிக் கொள்ளவேண்டிய தேவையும் நேர்சீரான மனப்பாங்கு மாற்றங்களை உள்வாங்கிக் கொள்வதற்கான நெகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்திக் கொள்வதும் இன்றியமையாததாகும்.
இவ்வாறாக இஸ்லாமிய குடும்ப உருவாக்கத்தில் முஸ்லிம் பெண்களின் முன்னுரிமைப்படுத்தப்பட்ட சில பங்களிப்புகளைச் சுருக்கமாக நோக்கலாம்.
சிறந்த பயிற்றுவிப்பாராகத் தன்னை மாற்றிக் கொள்ளுதல்
வீட்டில் தாய்மார் தமது குழந்தைகளைச் சிறந்த இஸ்லாமிய அடிப்படையில் பயிற்றுவிக்க முன்வருவதன் மூலம் அவர்களின் கல்வி தொடர்பான கற்றல் வாசிப்பு ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகள் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதிலும் ஆன்மீக உணர்வுகளை உள்ளத்தில் ஏற்படுத்தி அல்லாஹ்வை அஞ்சி வாழக்கூடிய நல்ல பண்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்ட தனிமனிதர்களாக அவர்களை உருவாக்குவதிலும் பிற மனிதர்களுடன் ஆரோக்கியமான சமூக உறவுகளைப் பேணிக் கொண்டு அவர்களுடன் இணக்கப்பாட்டுடன் உறவாடிடச் சரியாக சமூகமயமாக்கலுக்குட்படுத்துவதிலும் வெற்றி பெற்று இருதரப்பிலும் வெற்றி- வெற்றி (win – win situation) நிலையை அடைந்து கொள்ளலாம்.பொதுவாக பெண்கள் குடும்பத்திற்காகச் சமையல் செய்தல்,குழந்தை,வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் என்று அதிக நேரத்தைச் செலவழித்தாலும் வீட்டில் பல சந்தர்ப்பங்களில் பெண்களும் அமைதி. நிம்மதியை இழந்து ஏனையோரும் மகிழ்ச்சியற்றவர்களாகக் காணப்படும் நிலையை சமூகத்தில் அவதானிக்கலாம். இங்கு வீட்டு நிர்வாகத்தில் பங்கேற்கும் பெண்கள் குடும்ப உருவாக்கத்துடன் தொடர்பான இஸ்லாமிய, சமூக,உளவியல் மற்றும் பொருளாதார அறிவை மேம்படுத்திக் கொள்வதன் மூலமே காலமாற்றத்திற்கேற்ப குடும்பத்தைக் கையாள்வதில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் மாற்றங்களை மேற்கொள்வது சாத்தியமாகும். இதனைப் பின்வரும் சிறிய கதைகக்கூடாக உணர்ந்து கொள்ளலாம்.
ஒரு மர வியாபாரியிடம் வேலை கேட்டு ஒரு வாட்ட சாட்டமான ஆள் வந்தார். மரம் வெட்டும் வேலை கொடுக்கப்பட்டது. மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டவர். கோடாலியை எடுத்துக் கொண்டு போனார். வெட்டத் தொடங்கினார். நல்ல வேகம் மாலை சூரியன் மறைவதற்குள் 18 மரங்களை வெட்டி விட்டார். “தொடர்ந்து இப்படியே செய்யப்பா” என்று பாராட்டினார் முதலாளி. அடுத்த நாள் 15 தான் வெட்ட முடிந்தது. அதற்கும் அடுத்த நாள் அதிக முயற்சி செய்தும் 10மரங்கள் மட்டுமே அவரால் வெட்ட முடிந்தது. மரம் வெட்டுபவர் வருத்தப்பட்டார். “நாளுக்கு நாள் என் பலம் குறைந்து கொண்டே வருகிறதே! என்ன பிரச்சினை? என வினவ “அய்யா! நான் ஏதும் வஞ்சகம் செய்யவில்லை. எவ்வளவோ கடுமையாகத்தான் முயல்கிறேன். ஆனால் தனை விடக் கூடுதலாக என்னால் எதனையும் வெட்ட முடியாது” முதலாளியிடம் வருத்தத்துடன் சொன்னார். அப்போது முதலாளி கேட்டார். “அப்படியா சரி நீ கடைசியாய் எப்போது உன் கோடாலியைக் கூர்மைப்படுத்தினாய்? அதற்கு வேலையாள் “இல்லைங்க அய்யா அதில் நேரத்தை வீணாக்காமல் அந்த நேரத்திலும் மரங்களையே வெட்டினேன்” எனப் பதிலளித்தார்.கோடாலி கூர்மையானால் சுலபமாக வெட்ட முடியும். கூடுதல் மரங்களை வெட்ட முடியும் என்பது தெரிந்ததுதான். இங்கே கோடாலியைக் கூர் செய்வது போலத்தான் வேலைக்குத் திட்டமிடுவது. திட்டமிட்டுச் செய்தால் ஒரு வேலையைச் சுலபமாகவும் கூடுதலாகவும் செய்யலாம்.சில உழைப்பாளிகளின் பிரச்சினையே இதுதான் மாய்ந்து மாய்ந்து வேலை செய்வார்கள். ஆனால் விளைவுகள் அவ்வளவு பிரமாதமாக ஏற்படுவதில்லை.
குறிப்பாக ரமழானை எவ்வாறு கழிக்கப் போகிறோம் என்பதனை குடும்பத்தாருடன் இணைந்து திட்டமிட்டதன் பின்பு அச்செயற்பாடுகளைச் செய்யும் போது பிள்ளைகளோடு இணைந்து அவற்றைச் செய்வதுடன் அவர்களைத் தொடர்ந்து செய்வதற்குப் பயிற்றுவிக்க வேண்டும்.
உதாரணமாக “அறிவை வளர்த்துக் கொள்வதற்காக வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல்” என்ற நற்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதாக ஒரு தீர்மானத்தை குடும்பமாக இணைந்து எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதற் கூடாக நோக்கலாம். தற்காகப் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதுடன் அந்த செயற்பாட்டில் தன்னையும் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு வீட்டில் வசிக்கும் கணவன்பெற்றோர். ஏனைய உறவுகளையும் இச்செயற்பாட்டில் உள்வாங்குவது அவசியமாகும்.
கல்வி மற்றும் அறிவூட்டல்
நவீன உலகில் வெறும் பாடப்புத்தக கல்வி மட்டும் போதாது. பிள்ளைகளுக்கு உலக அறிவும்இ மார்க்க அறிவும் சமமாக தேவைப்படுகிறது. தாய்மார்கள் முதலில் தங்களை படித்து புரிந்து அறிவார்த்த பெண்களாக மாற வேண்டும். பின்னர் அந்த அறிவை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டில் குடும்ப நூலகம் அமைத்து அதில் இஸ்லாமிய நூல்கள் அறிவியல் புத்தகங்கள் வரலாற்று நூல்கள் இலக்கிய படைப்புகள் என பல்வேறு வகையான புத்தகங்களை சேகரிக்க வேண்டும்.குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். வாசித்த புத்தகங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மூலமே வாசிப்புக் கலாசாரத்தை ஏற்படுத்துவதுடன் இஸ்லாமிய கலாச்சாரம் குறித்த அறிவையும் நடைமுறை சார் வழிகாட்டுதல்களையும் வழங்க முடியும்.
குறிப்பாக இன்றைய டிஜிட்டல் உலகில் இணையத்தை பயனுள்ள வழியில் பயன்படுத்துவது சமூக ஊடகங்களை முறையாக கையாளுவது போன்றவற்றை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.இதில் பெற்றோர்களும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.பள்ளி படிப்புடன் கலைவிளையாட்டு சமூக சேவை போன்ற துறைகளில் பிள்ளைகளின் ஆர்வத்தை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறான இணை பாடவிதான செயற்பாடுகளில் பங்கேற்பதன் மூலம் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள ஆதரவளிப்பதற்கூடாக அவர்களது ஆளுமைப் பண்புகளை செப்பனிட துணை நிற்க வேண்டும்.
குடும்பத் துறையில் தன்னை தேர்ச்சிப்படுத்திக் கொள்ளுதல்:
இந்தவகையில் ஒரு முஸ்லிம் இறைநம்பிக்கையுடனும் அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் பின்னணியைக் கொண்டவராகவும் இருப்பது அவரது ஈருலகவாழ்விற்கு துணைபுரியும். இவ்வாறாக எதிர்கால சந்ததிகளை உருவாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் பெற்றோர் அடிப்படையில் தமது அறிவுக் கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பது அவர்களது பொறுப்பைச் சரியாகச் செய்வதற்கு உந்துசக்தியாக அமையும்.ஒரு குடும்பத்தை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்றால் தாய்மார்கள் தங்களை அறிவு திறன் மற்றும் மனப்பாங்குகளைஇமேம்படுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கல்வி கற்றல் புதிய திறன்களை வளர்த்தல் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மார்க்க அறிவை பெருக்கிக்கொள்வதுடன் நவீன உலகின் சவால்களைஎதிர்கொள்ளும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தனது தலையாய கடமையான குடும்ப உருவாக்கத்துடன் தொடர்புடைய அறிவு மற்றும் திறன்களையும் நேர்சீரான மனப்பாங்குகளையும் மேம்படுத்திக் கொள்வதுடன் சமூக உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதானது அப்பொறுப்பை முறையாகச் செய்வதற்குத் துணை புரிவதுடன் குடும்ப உருவாக்கத்திற்கு பாரியளவில் முதலீடு செய்யப்படும் அவளது அர்ப்பணிப்புக்கள் முன்னெடுப்புக்களை அனைத்தும் தூர நோக்குடனான பெறுமதிமிக்க அடைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடைமுறையில் பொதுவாக அனைவரும் தொழில்சார் அறிவு திறன் மேம்படுத்துவதற்கு வழங்கும் முக்கியத்துவத்தினை குடும்ப உருவாக்கத்திற்கு வழங்கத் தவறும் நிலையை சமூகத்தில் அவதானிக்க முடிகின்றது.பிள்ளைகளுக்கு இஸ்லாமிய மற்றும் உலகியல் கலைகளைப் பற்றிய அறிவை பெற்றுக் கொள்ள வழிவகுப்பதோடு அதற்கான வசதிஇ வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவராக (Facilitator) தாய் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். கல்வியின் உச்ச நோக்கம் பிள்ளைகள் வினைத் திறனுள்ளவர்களாகவும் தன்னம்பிக்கையுள்ளவர்களாகவும் செயற்படுபவர்களாகவும் அவர்களை உருவாக்குவதாகும். சுதந்திரமாகச்
ஆன்மீக சூழலை உருவாக்கி உளவளத்ததைக் கட்டியெழுப்பும் அச்சாணிகளாய் திகழ்வர்
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தான் இவ்வுலகில் இஸ்லாமிய வரையறைகளுடன் கூடிய ஆரோக்கியமானஇ மகிழ்ச்சிகரமான வாழ்வை வாழ வேண்டும் என்பதே உயரிய உலகியல் இலக்காகும். அவ்விலக்கானது பௌதிக ரீதியிலான பொருட்களினால் அடையப்படுவதனை விட தனது யதார்த்த நிலைமையை விளங்கி அதனை ஏற்று அங்கீகரிக்கும் ஆன்மீகப் பெறுமானங்களை ஊட்டச் சத்தாகக் கொண்ட மனித உள்ளத்தினாலே அடைவது சாத்தியமாகும். இஸ்லாம் ஆரோக்கியத்தையே அனைத்து ஆரோக்கியங்களையும் விட முக்கியத்துவப்படுத்துகின்றது. இதனையே ரஸுல் (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் உள்ளத்தைப் பற்றி நீண்டதொரு ஹதீஸின் இறுதிப் பகுதியில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். ஒவ்வொரு மனிதனது உடலிலும் ஒரு சதைத் துண்டு காணப்படுகின்றது. அது சீராகி விட்டால் முழு உடம்பும் சீராகி விடும் அது சீர்கெட்டு விட்டால் முழு உடம்பும் சீர்கெட்டு விடும் அதுதான் உள்ளமாகும்.” (புஹாரி)
குடும்பத்தில் ஆன்மீக சூழலை உருவாக்குவதில் பெற்றோர் இருவருக்கும் வேறுபட்ட முறைகளில் பங்கிருப்பதுடன் தாய்மார்களின் பங்களிப்பு தனித்துவமானதாரும். காலை நேரத்தில் குடும்ப உறுப்பினர்களை தொழுகைக்கு எழுப்புவது முதல்இ இரவு படுக்கை நேரத்தில் துஆக்களை ஓதுவது வரை ஒவ்வொரு நாளும் ஆன்மீக செயல்பாடுகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் மேலும் வீட்டில் குர்ஆன் ஓதும் வட்டங்களை ஏற்பாடு செய்தல் இஸ்லாமிய சொற்பொழிவுகளை கேட்டல்இ மார்க்க அறிஞர்களின் உரைகளை பகிர்தல் போன்றவற்றின் மூலம் தொடர்ச்சியான கல்வி சூழலை உருவாக்க வேண்டும். பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே நபிமார்களின் வரலாறுகளை கதைகளாக சொல்லி அவர்களிடம் இஸ்லாமிய பண்புகளை விதைக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் குடும்பத்தில் ஒரு ஆன்மீக சூழலை உருவாக்க உதவுவதாக அமையும்.
வீட்டில் பிள்ளைகள் கணவன் மற்றும் பெற்றோர் தன்னைப் படைத்த இரட்சகளைச் சரிவரப் புரிந்து கொண்டு அவன் விருப்பு வெறுப்புக்களை அறிந்து அதனடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக் கொள்ள முயற்சிப்பதுடன் அல்லாஹ்வுக்கு கீழ்படிபவர்களாகத் தன்னை மாற்றிக் கொள்வதில் ஒரு முஸ்லிம் பெண்ணின் பங்களிப்பு இன்றியமையாதது. முதலில் இஸ்லாமியக் கடமைகளைத் தனது வாழ்வில் கடைபிடித்தொழுகி முன்மாதிரியாகத் திகழ்வதுடன் பிள்னைகளையும் இணைத்துக் கொண்டு கூட்டாகச் செய்வதற்கூடாக அவர்களை முறையாகப் பயிற்றுவிக்கலாம். அத்தோடு ஏனையோரும் முறையாகக் கடமைகளை நிறைவேற்றிடநேரத்தையும் சந்தர்ப்பங்களையும் திட்டமிட்டு உருவாக்கி அவர்களையும் ஆன்மீக சூழல் உருவாக்கத்தில் பங்காளர்களாக மாற்றிட வழியமைக்கலாம்.
இத்தார்மீகப் பொறுப்பையே அல்குர்ஆன் பின்வருமாறு சுட்டிக்காட்டுகின்றது. உங்களையும்இ உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடின சித்தமுடைய பலசாதிகளான மலக்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் (வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்.(666)
உள்ளங்களை இறையச்சத்தைக் கொண்டு உணர்வூட்டுவதன் மூலம் நாளாந்த வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அடிப்படையான ஆன்மீக வறுமையை நீக்கிக் கொள்ள ஒருவர் அடுத்தவருக்கு உதவிடப் பெண்கள் தமது பங்களிப்பை வழங்குவது அவசியமாகும்.
குடும்ப உறவுகளுடன் ஒத்துணர்வோடு உறவாடி இஸ்லாமியக் குடும்ப இலக்குகளை உறுதிப்படுத்தி அறிவுபூர்வமான பெற்றோரியத்தின் சாயலில் பிள்ளைகளை வளப்படுத்துதல்( நவீன பிள்ளை வளர்ப்பு முறைகளைக் கற்று கையான முற்படுதல்)தற்போதைய வாழ்க்கை முறையில் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்குவது குறைந்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் டிவி போன்றவை குடும்ப உறவுகளை பாதிக்கின்றன. இந்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக உணவருந்துதல் பொழுதுபோக்கு செயல்பாடுகளில் ஈடுபடுதல்ஆரோக்கியமான குடும்ப வலந்துரையாடல்களில் ஈடுபடுதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும். உறவினர்களை சந்தித்தல் நண்பர்களுடன் பழகுதல் போன்றவற்றையும் ஊக்குவிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களை புரிந்துகொண்டு அவற்றை சமாளிக்க உதவ வேண்டும்.
வீட்டில் பிள்ளைகள் சுதந்திரமாகவும்சுயாதீனமாகவும் செயல்பட ஊக்குவிப்பதோடு அவர்களது வேலைகளை அவர்களாகவே செய்து கொள்ள வழிகாட்ட வேண்டும். பிள்ளைகளின் தனியாள் வேறுபாடுகளைக் கவனத்திற் கொண்டு அணுகு முறைகளை கையாள்வதற்கூடாக நேர்சீரான தாக்கம் விளைவிக்கக் கூடிய இடைவினையை ஏற்படுத்தலாம். வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய விழுமியங்கள் ஒழுக்க நெறிமுறைகளையும் குறிக்கோள்களையும் திணிக்காமல்அன்பாகக் கற்றுக் கொடுப்பது அவர்களது உள்ளங்களில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பிள்ளைகளின் உள்ளத்தில் அவர்களது தாயான நான் அவர்களுக்கு நெருக்கமானவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதன் மூலம் அள்ளியோன்னியமான உறவைப் பேணிக் கொள்ளலாம்.
எப்போதும் வீட்டுப் பெண்கள் யாரிடமும் கருத்துத் திணிவை மேற்கொள்ளாது. தான் கூறும் அல்லது செய்யப் போகும் காரியத்திற்கான காரணம் மற்றும் விளைவுகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு வீட்டு விவகாரங்களில் பிள்ளைகளும் மற்றவர்களும் தீர்மானங்களை எடுத்திட வழியமைத்துக் கொடுப்பதுடன் கூட்டு முயற்சிக்கு வழிவகுப்பது மற்றவர்களை விருப்பத்துடன் செயலாற்றிட வழிவகுக்கும். அதே வேளை ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு இடமளிப்பதன் மூலம் கருத்து முரண்பாடுகளைத் தவிர்ந்து கொள்ள அத்தோடு எந்த ஒரு தீர்மானத்தையும் அதிகாரம் மற்றும் கட்டளையிடும் தன்மையிலிருந்து மாறுபட்டுத் தான் முதலில் செய்ய ஆரம்பிப்பதன் மூலம் ஏனையோரின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி மறைமுகமான ஊக்குவிப்பை ஏற்படுத்துவது தூண்டலாக அமையும்.
இன்றைய தலைமுறை பிள்ளைகள் முந்தைய தலைமுறையை விட மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்களின் சிந்தனை எதிர்பார்ப்புகள் கற்கும் முறைகள் எல்லாமேமாறுபட்டுள்ளன. எனவே பழைய பிள்ளை வளர்ப்பு முறைகளை மட்டுமே பின்பற்றுவது பொருத்தமற்றதாகும்.
நவீன உளவியல் அறிவை பயன்படுத்தி பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளுதல் அவர்களின் கருத்துக்களை மதித்தல் உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக்கொடுப்பதுடன் அவர்களுடன் நட்பு ரீதியாக பழக வேண்டும். ஒவ்வொரு பிள்ளையின் தனித்துவத்தை மதித்துஅவர்களின் திறன்களை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக பிள்ளைகள் தவறு செய்யும்போது அவர்களை திட்டுவதை விட அந்த தவறிலிருந்து கற்றுக்கொள்ள வைப்பது முக்கியம். பிரச்சனைகளை சந்திக்கும்போது அவற்றை எப்படி அணுக வேண்டும். எப்படி தீர்வு காண வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். இது அவர்களின் மன ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.
ஒவ்வொரு பிள்ளையும் தனித்துவமானவர்கள். அவர்களின் திறன்கள் ஆர்வங்கள் கற்கும் முறைகள் வேறுபடும். இதனை புரிந்துகொண்டு அதற்கேற்ப வழிகாட்டுவதன் மூலம் அவர்களின் தனித்துவ வளர்ச்சியில் பங்களிப்புச் செலுத்துவதே சிறந்த அக்கறையை வெளிப்படுத்துவதாக அமையும். இதன் மூலமே பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலான சீரற்ற இடைவெளியைக் குறைக்கலாம்