
Usthath Ash Sheik Abdhul Rasheedh
உலகின் பருவ காலங்கள் மாற்றமடைந்து அடை மழையும் சுழற்சியாக வருவது போன்று மனித வாழ்விலும் இன்ப துன்பங்கள் மாறி வருவது இயற்கையின் நியதியாகும். இது மனித சமூகத்திற்கு பொதுவானது. இறைத்தூதர்கள் கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.ஒருவர் தனது வாழ்வில் சாதகமான சந்தர்ப்பங்களை எதிர்கொள்கின்றபோது மகிழ்ச்சியடைகின்றார். இந்த மகிழ்ச்சி அளவு கடந்து அதிகரிக்கும்போது புகழாசை,பெருமை, ஆணவம் போன்று அவருக்குள் அதிகரிக்கின்றன. இதற்கு மாற்றமாக அவர் தனக்கு ஒவ்வாத பாதகமான நிலைகளைச் சந்திக்கின்ற போது அவரை கவலை ஆட்கொள்கின்றது. இந்தக் கவலை அதிகரிக்கின்ற போது அவர் விரக்தியின் விளிம்பில் தள்ளாடத்துவங்குகின்றார். ஆகஇந்த இரு நிலைகளும் மனிதனை அவனது இயல்பு நிலையில் இருந்து வெளியேற்றி இரு துருவ நிலைகளுக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றன. யதார்த்தமான பார்வையில் இவை இரண்டும் அவனைப் பாதிக்கின்றன. அழிவின் விளிம்புக்கு அவனை எட்டியுதைக்கின்றன.
இன்னொரு பக்கம் மனிதனின் இன்றியமையாத இலக்காகிய அமைதி மற்றும் நிம்மதி ஆகியன அவனுக்கு சாத்தியமானவையா என்ற வினா எம்முள் எழுகின்றது. இதற்கு நவீன சிந்தனைகள் ஒரு பதிலை தயாராக வைத்துள்ளன. “மனிதன் ஒரு பொருளாதாரப் பிராணி அவனது பொருளாதாரத் தேவை பூர்த்தி செய்யப்பட்டால் அவனது நிம்மதி எனும் விலை மதிப்பற்ற பொக்கிஷத்தைப் பெற்றுக்கொள்வான்” என்ற தீர்வொன்றை முன்வைக்கின்றன. இந்தச் சிந்தனையே இன்று மனித சமூகம் சரி பிழை பாராது பொருளீட்டும் செயற்பாட்டில் மூழ்கி சீரழிய அடிப்படையாய் அமைந்துள்ளது.
அதேபோன்று மனிதன் மகிழ்ச்சியை எப்போதும் விரும்புபவன் என்ற எடுகோளின் அடிப்படையில் மனிதனுக்கு இலகுவில் மகிழ்ச்சி அடைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால் அல்லது கவலைகளை மறப்பதற்கு வழிகாட்டினால் இந்த இலக்கை அடைந்து கொள்வான் என்ற சிந்தனையின் விளைவே நேரத்தை விழுங்கும் எண்னற்ற பொழுது போக்குகளும் ஆடம்பர களியாட்டங்களும் அறிவையே மழுங்கடிக்கச் செய்து மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணும் எண்ணற்ற போதைப் பொருட்களின் உருவாக்கமுமாகும். ஆனால்இ துயரமான சங்கதி என்னவென்றால் இந்த இரண்டு சிந்தனைகளால் கௌரவத்துக்குரிய மனித சமூகம் அழிவு, ஆபத்து,விரக்தி, மன அழுத்தம் ஆகியவற்றை மாத்திரமே பரிசாகப் பெற்றது என்பதாகும்.
இத்தகைய சவால்களை எதிர்கொள்ள முடிந்தவர்கள் சுடந்து செல்கின்றார்கள். எதிர்கொள்ள முடியாமல் தோற்றுப்போனவர்கள் செயலிழந்து மன உறுதி குலைந்து மனவிரக்தியின் உச்சிக்குச் சென்று தற்கொலை வரை சென்றுவிடுகின்றார்கள். அறிவு மேதைகள் என்று போற்றப்படுபவர்கள் செல்வச் செழிப்பில் திளைத்தவர்கள் அதிகார செருக்கில் மமதை கொண்டு அலைந்தவர்கள் தங்களது இறுதி நேரத்தில் வெறுமையில் விரக்தி கொள்வதையும் சிலபோது தற்கொலையை தீர்வாகக் காண்பதையும் அவர்களின் இறுதி வார்த்தைகளும் வாழ்க்கை முடிவுகளும் உணர்த்துகின்றன.
வாழ்வதற்கு வாழ்க்கைச் சாதனங்கள் தேவை என்பதும். அது வாழ்க்கைக்கு அவசியமானதும் தவிர்க்க முடியாததுமாகும் என்பதில் இருவேறுபட்ட கருத்துக்கள் இருக்கமாட்டாது. ஆனால் அவற்றால் மாத்திரம் அமைதியையோ திருப்தியையோ தந்துவிட முடியாது மாற்றமாக அந்த சாதனங்களிலேயே மூழ்கிக்கிடப்பதாலும்
அவற்றையே எமது வாழ்வாக வரித்துக்கொள்வதாலும் பேராசை, போட்டி, பொறாமை போன்றனதான் அதிகரிக்கும். தங்கம் குவியலாகத்தான் கிடைத்தாலும் போதாதென்று இன்னும் அதிகமாய் ஆசைகொள்ளும் மனித மனத்தினால் எவ்வாறு அமைதி காணமுடியும்? இறுதியாக ஏமாற்றமே மிஞ்சும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஆதமின் மகனுக்கு தங்கத்தால் நிரப்பப்பட்ட பள்ளத்தாக்கு ஒன்று கொடுக்கப்பட்டால் அவர் இரண்டாவது ஒன்றை விரும்புவார். இரண்டாவதும் கொடுக்கப்பட்டால். மூன்றாவது ஒன்று கிடைக்க வேண்டும் என்று விரும்புவார். ஆதமின் மகனின் வயிற்றை மண்னைத் தவிர வேறொன்றும் நிரப்பாது. யார் மன்னிப்பு கோருகின்றாரோ அவரை அல்லாஹ் மன்னிக்கிறான். (புஹாரி)
அமைதி திருப்தி என்பன மனித ஆன்மாவின் இன்றியமையாத தேவைகள் என்பதை மனிதன் விளங்கி உணர்ந்து இருக்கின்றான். மனிதனின் முயற்சிகளின் அடிநாதமே அவற்றை அடைந்துகொள்வதுதான். தனது வாழ்வின் பெரும்பகுதியை அதற்காகவே செலவிட்டுக் கொண்டிருக்கின்றான் ஆனால் அடைவுகள்தான் சூனியமாக இருக்கின்றது. எல்லையற்ற விசாலமும் அதில் ஒவ்வொரு பொருளும் துல்லியமாக செயற்படும் இந்தப் பாருலக ஏற்பாட்டில் சிறந்தஉயர்ந்த கண்ணியமான படைப்பாக மனிதன் காணப்படுகின்றான்;. அதுபோல் பிரபஞ்சத்தின் அனைத்தையும் வசப்படுத்தி பயன்படுத்தும் ஆற்றலையும் அவன் பெற்றுள்ளான். இவை எவ்வளவு மகத்தான அருள் என்பதை சிந்திக்க வேண்டும் இத்தனை இருந்தும் மனிதன் தனக்கு இன்றியமையாத தேவையான அமைதியைப் பெற முடியாமல் இருக்கின்றான் என்றால்எங்கு கோளாறுஅது எப்படி சாத்தியமில்லாமல் போக முடியும். என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வாழ்க்கைத் தேவைகள் ஆசைகள் என்பது வேறு. அமைதி திருப்தி என்பது வேறு. இது ஆன்மாவுடன் தொடர்பானது. ஆன்மா பற்றிய அறிவு மனிதனுக்குச் சொற்பமாகவே வழங்கப்பட்டுள்ளது. அதனை அறிந்தவன் மனிதனைப் படைத்த அல்லாஹ் ஒருவனே. அவனால் மாத்திரமே ஆன்மாவின் அமைதிக்கு வழிகாட்ட முடியும்.
உண்மை என்னவெனில் மனிதன் ஆசைகளை அனுபவிப்பதற்காக அறிவை பயன்படுத்தினானே தவிர அறிவின் உண்மையான பயன்பாட்டை அடைய தவறிவிட்டான். அதாவது தன்னை வடிவமைத்த தனக்காக எல்லையில்லா பிரபஞ்சத்தை உருவாக்கிய தன்னையும் இந்தப் பாருலகையும் உரிமை கொண்டாடுகின்ற கருத்தாவை கண்டு கொள்ள தவறியதுவே மனிதனிடம் அமைதி திருப்தி இன்மைக்கான அடிப்படைக் காரனம்.
அல்லாஹ்வை அடைந்தவன் உலகத்தின் அனைத்தையும் அடைந்தவன் போலாவான்இ அவனை அடையத் தவறியவன் அனைத்தையும் இழந்தவன் போலாவான்.”
பிரபஞ்ச நாயகனை அறிந்து அந்த அறிவினால் ஏற்படும் உறவுதான்ஹிதாயத் எனும்நேர்வழியாகும்.இது அல்லாஹ் அடியானுக்கு வழங்கும் குறைவில்லாத எப்பொழுதுமேதெவிட்டாத அருளாகும். இதுவே அவனை ஆச்சரியமான வாழ்க்கைக்கு வித்திடுகின்றது. இந்த இறை எண்ணம் தரும் பரிசுதான் வாழ்க்கையின் ஆணிவேரான அமைதியும் திருப்தியுமாகும். அல்குர்ஆன் கூறுகின்றது. ‘(நேர்வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள்; மேலும் அல்லாஹ்வை நினைவுகூர்வதால்அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவுகூர்வது கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்துகொள்க!” 13:28.
இந்த முஃமினின் சிந்தனை அவனது நோக்கு இலட்சியம் எவ்வளவு தொலைதூரத்தைக் கொண்டது. அது பூவுலகைத் தாண்டி நிரந்தர உலகைத் தொட்டு நிற்கின்றது. அவனதுமனம் பரந்துஇ விரிந்ததுஇ துணிகரமானது எந்த சலசலப்புக்கும் அஞ்சாதது. அந்த உள்ளம் வெளிப்படுத்தும் நடத்தை ஆச்சரியமானது. அது உண்மைக்கும் நீதிக்கும் இலக்கணமானது.இந்தப் பாக்கியத்தைப் பெற்ற மனிதன்; வாழ்வில் அடையும் இன்பங்கள் எஜமான் மீது நன்றியை அதிகரிக்கும். அவனது அர்ப்பணங்கள் நம்பிக்கையை ஆழமாக்கும். சோதனைகள் பார்வையை கூர்மைப் படுத்தும். இதன் விளைவு உன்னதமான நடத்தைகளை மலரச் செய்யும். இந்த அடையாளங்கள் ஒரு சமூகத்தின் அத்திவாரங்களாக இருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா? சாத்தியம்தான். இதுதான் உலகமே சிலாகித்து பேசும் நூற்றாண்டு ஸஹாபாக்கள் வரலாறு.படைப்பாளன் கூறுகின்றான்
நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால் நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் பரகத்துகளை பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர். ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்( 7:96)
உலக வாழ்வு என்பது மனிதனைப் பெருத்தவரையிலும் இறை நம்பிக்கையாளராக இருந்தாலும் இறை நம்பிக்கையற்றவராக இருந்தாலும் அது ஒரு சோதனைக்களம். அந்த சோதனைகளை எதிர் கொள்ளும் போதெல்லாம் தனது மனதை அமைதியும் நிதானமும் கொண்டதாக பராமரிப்பவரே தனது நடத்தையை சீர் செய்து கொள்வார். காரணம் அவரால் தான் நிதானமாக சிந்திக்க முடியும் அத்தகைய சிந்தனைதான் உண்மையானநேர்மையாக செயற்பாட்டை வெளிப்படுத்தும் அழகிய செயலாகும்.
அல்குர்ஆன் கூறுகிறது. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்.மிக மன்னிப்பவன்.( 67:2)
ஒரு முஃமினால் மாத்திரமே இந்த பாக்கியத்தை அடைய முடியும் அது எவ்வாறு என்பதை அவதானிப்போம். ஒரு அவசியத் தேவைக்காக் கொண்டு சென்ற ஒரு கோடி பணம் பறிபோய்விட்டதுஇ அல்லது தனக்கோ தன் குடும்பத்தில் ஒருவருக்கோ தீர்வு காண முடியாத நோயொன்று தொடர்ந்து வருகின்றது. அல்லதுஇ தனது முயற்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. இத்தகைய தருணங்களில் மனிதனின் மனம் பதபதைத்துப் போகும். கோபமும் வெறுப்பும் விரக்தியும் இயலாமையும் உச்சநிலை காணும் என்ன செய்வது எப்படிச் செய்வது என்று விளங்காமல் தடுமாற்றம் எல்லைகடந்திருக்கும். நிதானமின்மையும் அவசரமும் அவரின் அறிவையும் மழுங்கச் செய்திருக்கும். அந்த நேரம் அவரின் செயல்கள் புதிய பிரச்சனையைத்தான் தோற்றுவிக்கும்.
இப்பொழுது அவர் கவலையும் விரக்தியும் நிறைந்த நிலையில் வீடு சென்றால் அங்கு பிள்ளைகளாலோ குடும்பத்தவர்களாலோ ஏதும் அசௌகரியம் ஏற்படாமல் இருக்க வேண்டும். சந்தர்ப்ப வசமாக ஏற்பட்டால் என்ன நடக்கும் என்று யாருக்கும் சொல்ல முடியாது.
அதுபோன்று அவர் மனிதர்களுக்கு முகம் கொடுக்க விரும்ப மாட்டார். சாப்பிடுவதற்கு மனம் இருக்காது. தூக்கம் வராதுஇ விடிந்தாலும் வழமையான வேலைக்குச் செல்லவும் மனம் இருக்காது. ஒரு சோதனையைச் சந்தித்ததால் எத்தனைஇழப்புக்கள். ஒரு முஃமின் இத்தனைப் பாதிப்புக்களிலிருந்தும் விடுதலைப் பெற்று சோதனையையே சந்திக்காதவன் போல் எவ்வாறு வாழ்க்கையைத் தொடர்வான் என்று பாருங்கள்.
முஃமின் ஓர் இழப்பைச் சந்தித்தால் உடனடியாக அது அவன் மனதில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் அதனை ஷைத்தான் வளர்த்து வியாபிக்கச் செய்யவும் முடியும். அவர் உயிரோட்டமாக தக்வாவை பராமரிப்பவராக இருந்தால் இறை எண்ணம் நினைவுக்கு வரும். அப்போது தான் கவலையடைந்தது சற்று நேரத்தில் பிழையாகச் சிந்தித்தது பற்றி வெட்கப்படுவார்.
அல்லாஹ் கூறுகின்றான். “நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அவர்கள் திடீரென விழிப்படைந்து கொள்வார்கள் (7:201)
வாழ்க்கையில் எந்தக் காரியத்தை முஃமின் எதிர் கொண்டாலும் அவனுக்கு இறை நினைவு வந்தால் அது அல்லாஹ்வின் நாட்டம் என்று எண்ணுவான். அது எப்பொழுதோ எழுதப்பட்டது. அந்த எழுத்து அறிவு பூர்வமானதுஇ நீதம் நிறைந்ததுஇ என்மீது அன்பையும் அருளையும் அள்ளித் தருவதுஇ அதனுடன் நான் எப்படி முரண்பட முடியும் என்று சிந்திப்பான். இதனைத்தான் விழிப்படைவான் என்று அல்குர்ஆன் கூறுகிறது. இப்பொழுது தன்னைதேற்றிக் கொண்டு அவன் ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்’ (யார் நாடினானோ அந்த அல்லாஹ்வுகுரியவன்தான் நான் அவனிடமே நான் திரும்பச் செல்வேன்) என்று கூறுவான். அதாவது இதனை நான் பொருந்திக் கொண்டால் அவனிடம் எனக்கு ஏராளமான நற்பாக்கியங்கள் இருக்கின்றன என்பதை அறிவான். அல்லாஹ் கூறுகின்றான்.
“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள் உயிர்கள் கனிவர்க்கங்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; (நபியே!) பொறுமையுடையோருக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக!(பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் அருள்களும் கிருபையும் உண்டாகின்றன இன்னும் இவர்கள்தாம் நேர்வழியை அடைந்தவர்கள்” (2:155,156,157)
இப்பொழுது இவர் அறிவாலும் உடலாலும் தான் சந்தித்த பாதிப்பை எதிர்கொள்கின்றார்;. அவரின் உள்ளம் நிதானமாக தொழிற்படுகின்றது. அது அமைதியைக் கண்டுகொண்டது. இப்போழுது தான் எதிர்கொண்ட பாதிப்பை நிதானமாகவும் இறை வழிகாட்டலின் படியும் சந்திக்கும் பக்குவத்தைப் பெற்றுவிட்டது. எனவே அவர் தனது காரியங்களை சரியாகவும் நீதமாகவும் மேற்கொள்வார். நபி (ஸல்) அவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் அருமையான துஆ ஒன்றைக் கற்றுத்தந்தார்கள்.
اللهمَّ أَجِرْنِي فِي مُصِيبَتِي وَاخْلُفَ لِي خَيْرًا مِنْهَا
“யா அல்லாஹ் இந்தப் பாதிப்புக்கு எனக்கு நிறைவான கூலியைத் தந்தருள்! மேலும் இதனை சிறந்த ஒன்றாக எனக்கு மாற்றித் தருவாயாக! ஈமான் ஒன்றுதான் இத்தகைய பாக்கியத்தை பெற்றுத்தர முடியும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“ஒரு முஃமினின் காரியம் ஆச்சரியமானதே! அவனது காரியம் அனைத்தும் அவனுக்கு நல்லதாக அமைகிறது. ஒரு முஃமினைத் தவிர வேறு எவருக்கும் இது நிகழ்வதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் நன்றி கூறுகின்றான். அது அவனுக்கு நல்லதாகிவிடுகிறது. அவனுக்கு துயரை ஏற்படுத்தி விட்டால் பொறுமையாக இருக்கிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகிறது. (முஸ்லிம்)
இந்த உயர்ந்த உள்ளம் இழப்பின் போது துவண்டுவிடாமலும் மகிழ்ச்சியின் போது வரம்பு மீறிவிடாமலும் இரண்டு நிலைகளிலும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ளும் பக்குவம் பெற்றிருக்கும். அது அற்புதமான வாழ்க்கையை வாழக் கற்றிருக்கும். இத்தகைய உள்ளத்தையே அல்குர்ஆன் ‘கல்புன் சலீம்” (பாதுகாப்பான உள்ளம்) என்றும் ‘கல்புன் முத்மயின்னஹ் (சாந்தியடைந்த உள்ளம்) என்றும் அழைக்கின்றது.
அல்லாஹ் கூறுகிறான். ‘(ஆனால் அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே”நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும் (அவனால்) திருப்தி கொள்ளப்பட்ட நிலையிலும் மீளுவாயாக!” (89:27,28) இதுவே இறை நம்பிக்கை தரும் இணையற்ற இன்பமாகும். இதுவே ஒரு அடியானுக்கு ஆத்மானந்தத்தை அளவின்றி அள்ளித்தரும் அருள்பாக்கியமாகும்.